கலாச்சாரமும் – ஈகைப் பண்பின் முக்கியத்துவமும்

The Importance of Charity in Tamil Culture

சங்க காலத் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் ஈகைப் பண்பு தலை சிறந்து விளங்கியது.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கிணங்க சங்கத்தமிழர்கள் ஈகைப் பண்பில் சிறந்து விளங்கினர்.

அறிவில் மூத்த சான்றோர்கள் சங்க இலக்கியங்கள் வாயிலாக ஈகைக்கு எடுத்துக்காட்டாக கடையெழு வள்ளல்களின் ஈகைத் திறனை எடுத்தியம்பியுள்ளனர்.

காற்றில் துவண்டு படருவதற்கு இயலாமல் வருந்துவதாக எண்ணி முல்லைக்கொடிக்கு தன் தேரையே ஈன்றான் பாரிவள்லல்.

கார் மேகத்தைக் கண்டு அழகிய தன் தொகையை விரித்து ஆடத் தொடங்கிய மயிலைப் பார்த்த பேகன் மயிலானது குளிரில் நடுங்கிப் பரிதவிக்கிறதோ என்று எண்ணி தன்னுடைய பொன்னாடையையே போத்து மகிழ்ந்தான்.

தமிழ் வாழ வேண்டும் என்ற பெரிய உள்ளம் கொண்ட அதியமான் கிடைத்ததற்கரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் தமிழ் புலமை பெற்ற தமிழ் மூதாட்டிக்கு கொடுத்துதவினார்.

கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரி என்னும் மன்னன் வளமான நாடுகள் பலவற்றையும் தங்களுடைய திறமைமிக்க கூத்தின் மூலம் மகிழ்வித்த கூத்தாடிகளுக்கு கொடுத்து மகிழ்ந்தான்.

துன்பத்தால் துவண்டு வாடிய கலைஞரை தன்னுடைய சிறந்த ஆற்றலால் தோற்றுவித்தும் பெரிய மனதுடன் அக்கலைஞரின் வறுமையினைப் போக்க தன்னிடமுள்ள உயர் ஜாதிக் குதிரைகளையே பரிசாகக் கொடுத்தார் வள்ளல் காரி.

அண்டிராய் ஆய் என்னும் வள்ளல் கிடைத்ததற்கரிய நாக தேவதையின் நீல மணியினையும், கலிங்கம் என்ற ஆடையினையும் யாசித்து வந்த இரவலர்களுக்கு கொடுத்து அகமகிழ்ந்தான்.

வறுமையில் வாடி, பசியினால் துன்புற்று வந்த இரவலர்களுக்கு வாரி வழங்கி, பசி பிணியினைப் போக்கி எண்ணற்ற திரவியங்களை வழங்கி அகமகிழ்ந்தான் வள்ளல் நள்ளி.

ஓய்மா நாட்டை ஆண்ட நல்லியக் கோடன் என்ற மன்னன் எழுவரும் ஆற்றிய ஈகைப் பணியினைத் தான் ஒருவனாகவே ஆற்றி ஈகையில் சிறந்து விளங்கியதை பத்துப்பாட்டில் காணலாம்.

இவ்வாறு ஈகைக்கு எடுத்துக்காட்டாகச் சிறந்து விளங்கினார்கள் பண்டைய மன்னர்கள். அன்று அவ்வாறு சிறந்த பண்போடு கூடிய கலாச்சாரத்தையும் மேற்கொண்டனர் நம் முன்னோர்கள்.


Tags: tamil, tamil kings

Average Rating: 5.0/5 (1 votes)

Click a star to rate this article (1-5).


← Back to Archive